பொருள் விரிவாக்கம்

சன்ஷைன் ஹோல்டிங்ஸ் இலங்கையின் பெருநிறுவனங்களினால் முன்னெடுக்கப்படும் 'மனிதநேய ஒன்றிணைவு' அவசர நிவாரண பணியில் இணைந்துள்ளது

இம் மனிதநேய பணியானது 200,000 க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டதாகும்

2022 ஜுன் 3         (கொழும்பு)

 

Sunshine Holdings Joins Manudam Mehewara

படத்தில் இடமிருந்து வலமாக : சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பிஎல்சி கூட்டுறவு தொடர்பு உதவி முகாமையாளர் பிரவீன் எடிமா, சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பிஎல்சி கூட்டுறவு தொடர்பு மற்றும் சிஎஸ்ஆர் சிரேஷ்ட முகாமையாளர் ப்ரியா எப்பிடவல, சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பிஎல்சி மனிதவள குழும தலைவர் மிச்சேல் சேனநாயக்க, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்ஹ, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, குழுமத்தின் பிரதம அதிகாரி நவீன் பீரிஸ், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி பெரு நிறுவன மற்றும் வர்த்தக அபிவிருத்தி சிரேஷ்ட பொது முகாமையாளர் ரமணன் தேவைரகம், சர்வோதய சிரமதான இயக்க நிறைவேற்றுப் பணிப்பாளர் சமிந்த ராஜகருணா

தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியால் நாடு முழுவதிலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அவசரகால நிவாரணங்களை வழங்கும் நோக்கில், டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, MAS Holdings, Hemas Holdings PLC, CBL குழுமம், Citi, சர்வோதய சிரமதான சங்கம் மற்றும் PwC ஸ்ரீலங்கா ஆகியவற்றின் ஒன்றிணைவில் ஆரம்பிக்கப்பட்ட 'மனிதநேய ஒன்றிணைவு' எனும் மனிதாபிமான செயற்திட்டத்திற்கு சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பிஎல்சி (Sunshine Holdings PLC ) நிறுவனமும் தமது ஆதரவை வழங்க முன்வந்துள்ளது .

மேற்படி செயற்திட்டத்தின் நிறைவேற்று பங்காளியான சர்வோதய சிரமதான சங்கம் மற்றும் சுயாதீன கணக்காய்வாளர் PwC Sri Lanka ஆகியோர் உட்பட ஒருமித்த எண்ணம் கொண்ட பெருநிறுவன பங்காளிகளுடன் முன்னெடுக்கப்படும் 'மனிதநேய ஒன்றிணைவு' முயற்சியானது, நாடு முழுவதும் உள்ள 200,000க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவசர நிவாரணம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. நாடளாவிய ரீதியில் 25 மாவட்டங்களிலும் 40,000 ற்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இந்நிவாரணம் தற்போது விநியோகிக்கப்படுகின்றது. பொருளாதார முன்மாதிரி திட்டத்தினூடாக நிலையான நலன் பரிமாற்ற முறையொன்று நாட்டில் நிறுவப்படும்வரை மேற்படி 'மனிதநேய ஒன்றிணைவு' வேலைத்திட்டமானது 60-90 நாட்களுக்கு தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் மனித வள குழும தலைவர் மிச்சேல் சேனாநாயக்க அவர்கள் கருத்து தெரிவிக்கையில், "சன்ஷைன் ஹோல்டிங்ஸ்" நிறுவனத்தை சேர்ந்த நாங்கள் எப்போதும் நல்ல விஷயங்களை வாழ்வில் கொண்டு வருவதை நோக்காகக் கொண்டுள்ளோம், 'மனிதநேய ஒன்றிணைவு' அந்த நோக்கத்தின் ஒரு உருவகமாகும். தேசத்தைக் கட்டியெழுப்புவதில் நாம் அனைவரும் முன்னோக்கிச் செல்லவும், நமக்குரிய பங்களிப்பை ஆற்றவும் வேண்டியிருப்பதால், இத்தகைய பொது நலன் பணியில் எங்களையும் ஒன்றிணைத்துக் கொண்டுள்ள டயலொக், MAS, Hemas, CBL மற்றும் Citi ஆகிய நிறுவனங்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இலங்கை அதன் மீள்தன்மையால் வடிவமைக்கப்பட்டுள்ளது, எனவே, சவால்கள் எமக்கு எதிராக வீசப்பட்ட போதிலும், நமக்கிடையிலான ஒன்றிணைந்த காரணத்தின் கீழ் நாம் தொடர்ந்து வலிமையிலிருந்து வலிமைக்கு முன்னேறுவோம். இலங்கை மீண்டும் எழுச்சி பெறும் என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன், மேலும் இந்த செயலூக்கமான முயற்சி செழித்தோங்குவதைக் காண்பதில் ஒருமித்த எண்ணம் கொண்ட பங்காளிகளுடன் இணைவதில் சன்ஷைன் மகிழ்ச்சி அடைகிறது” என்றார்.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழுமத்தின் டயலொக் என்டர்பிரைஸ் பிரிவின் பிரதம அதிகாரி நவின் பீரிஸ் அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “இந்தக் கூட்டமைப்பில் நல்ல பல நிறுவனங்கள் இணைந்திருப்பதைக் கண்டு நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். சவாலான காலகட்டங்களுக்கு மத்தியில், 'மனிதநேய ஒன்றிணைவு' போன்ற நேர்மறையான, நோக்கத்துடன் கூடிய முயற்சிகள் கருத்துருவாக்கப்பட்டு செயல்படுத்தப்படுவதைக் காண்பது நமது தேசத்தின் வளர்ச்சிக்கு நிறைய நம்பிக்கையை ஏற்படுத்துவதாக உள்ளது. 17 மில்லியன் வாடிக்கையாளர்களையும், இலங்கையின் பரந்த வலையமைப்பையும் கொண்டுள்ள டயலொக் நிறுவனமானது, அவசியத் தேவையுடையோரின் பசியைப் போக்க உதவுவதை, காலத்தின் தேவைக்கு ஏற்ற கௌரவிக்கப்படுவதான செயற்பாடாக பணிவுடன் நோக்குகின்றது. ஒருமித்த எண்ணம் கொண்ட நிறுவன பங்காளர்களுடன் ஒன்றிணைந்தவாறு, பாதிக்கப்பட்டுள்ள 200,000 குடும்பங்களுக்கு அவசர நிவாரணங்களை வழங்கும் பணியில் நாம் ஈடுபட்டுள்ளோம், இன்றுவரை இந்த இலக்கின் ஒரு பகுதியை நாங்கள் ஏற்கனவே அடைந்துள்ளோம். அவ்வாறே இன்னும் பலவற்றைச் சாதிக்கும் வகையில் இந்த ஒன்றிணைந்த முயற்சியில் எங்களுடன் கைகோர்க்க முன்வருமாறு இலங்கையின் ஏனைய பெரு நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுக்கின்றேன் " என்றார்.

'மனிதநேய ஒன்றிணைவு' அவசர நிவாரண திட்டத்தில் இணைந்து மேற்படி நிவாரண நடவடிக்கைகளை விரிவுபடுத்துவதில் பங்களிப்பு செலுத்த முன்வருமாறு அனைத்து பெருநிறுவனங்களுக்கும் 'மனிதநேய ஒன்றிணைவு' அழைப்பு விடுக்கின்றது. மேலதிக விபரங்களுக்கு, https://www.dialog.lk/corporate வலைத்தளத்தை பார்வையிடவும் .