பொருள் விரிவாக்கம்

டயலொக் பாடசாலைகளுக்கிடையிலான ரக்பி லீக் போட்டிகள் இன்று ஆரம்பமாகிறது

பருவகால போட்டிகளின் ஆரம்பத்தில் கிங்ஸ்வுட் கல்லூரிக்கு எதிரான போட்டியில் புனித ஜோசப் கல்லூரி தோல்வியுற்றது

ஜுன் 23, 2022         கொழும்பு

 

கொவிட் -19 பெருந்தொற்றின் காரணமாக கடந்த இரண்டு வருடகால இடைவெளியின் பின்னர், இலங்கையின் 'ப்ளூ-ரிப்பன்' போட்டியான 'டயலொக் ஸ்கூல்ஸ் ரக்பி லீக்- 2022' போட்டிகள் இன்று ஜூன் 23 ஆம் திகதி ஆரம்பமாககின்றன.அதன்படி கொழும்பு புனித ஜோசப் கல்லூரி, கண்டி கிங்ஸ்வுட் கல்லூரி ஆகிய கல்லூரிகள் ஜூன் 23 ஆம் திகதியன்று ஹெவ்லொக் விளையாட்டுக் கழகத்தில் நடைபெறும் பிரிவு1 இல் A பிரிவிற்கான தொடக்க ஆட்டத்தில் போட்டியிடவுள்ளன.

டயலொக் 'ஸ்கூல்ஸ் ரக்பி லீக்கின் 2020' ஆம் வருடத்திற்கான போட்டிகள் கொவிட் -19 பெருந்தொற்றின் காரணமாக மூன்று வார காலத்திற்கு குறைக்கப்பட்டிருந்த அதேவேளை, சுகாதாரத்துறை அமைச்சு விதித்திருந்த கொவிட் சட்ட திட்டங்களின் காரணமாக 2021 ஆம் ஆண்டுக்கான போட்டிகள் இரத்துச் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

டயலொக் 'ஸ்கூல்ஸ் ரக்பி லீக் 2022' தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்படுகின்ற பிரிவு 1இன் A பிரிவு போட்டிகள், நடைபெறவுள்ள உயர்தர பரீட்சைகளின் காரணமாக குறுகிய காலத்திற்கு வரையறுக்கப்பட்டுள்ளமைக்கு ஏற்ப முதல் 12 அணிகள் 34 போட்டிகளில் கலந்து கொள்ளவுள்ளன. இதனையடுத்து, எட்டு வாரங்களின் பின்னர் டயலொக் ஸ்கூல்ஸ் ரக்பி நொக்கவுட் போட்டிகள் இலங்கை பாடசாலைகள் ரக்பி கால்பந்தாட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டின் கீழ் மீண்டும் தொடர்ந்து நடைபெறும்.

டயலொக் ஸ்கூல்ஸ் ரக்பி லீக் 2022 இன் பிரிவு 1 இன் A போட்டிகளில் கொழும்பு- ரோயல் கல்லூரி, கொழும்பு- புனித பீட்டர்ஸ் கல்லூரி, கொழும்பு- புனித ஜோசப் கல்லூரி , கொழும்பு - வெஸ்லி கல்லூரி, கல்கிசை - புனித தோமஸ் கல்லாரி, கொழும்பு -இஸிப்பத்தான கல்லூரி, கண்டி - டிரினிட்டி கல்லூரி, கல்கிசை -விஞ்ஞானக் கல்லூரி, கண்டி, கிங்ஸ்வுட் கல்லூரி, கண்டி - வித்யார்த்த கல்லூரி, கட்டுகஸ்தோட்டை - புனித அந்தோனியார் கல்லூரி மற்றும் கண்டி - தர்மராஜா கல்லூரி ஆகியன கலந்து கொள்ளவுள்ளதுடன், மேலும் 24 க்கும் அதிகளவான பாடசாலைகள் பிரிவு 1 இல் பிரிவு B மற்றும் C பிரிவுகளின் கீழ் போட்டியிடவுள்ள அதே வேளை, மேலும் 40 பாடசாலைகள் பிரிவு 2 மற்றும் பிரிவு 3 ஆகியவற்றில் போட்டியிடவுள்ளன.

2019 ஆம் வருடம் உட்பட கடந்த மூன்று பருவங்களில் செம்பியனாகிய கொழும்பு றோயல் கல்லூரி, கொழும்பு புனித பீற்றஸ் கல்லூரி, கல்கிசை புனித தோமஸ் கல்லூரி மற்றும் கண்டி டிரினிட்டி கல்லூரியுடன் இணைந்து சிறந்த போட்டியாளர்களுள் ஓர் அணியாக திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

“பாடசாலை விளையாட்டுக்களுக்கான கால அட்டவணையில் அதிகம் எதிர்பார்க்கப்படுகின்ற நிகழ்வுகளில் ஒன்றாகிய டயலொக் ஸ்கூல்ஸ் ரக்பி லீக் மற்றும் நொக்கவுட் போட்டிகளின் 2022 வருடத்திற்கான போட்டிகளை நடத்துவதற்கு இலங்கை பாடசாலைகள் ரக்பி கால்பந்தாட்ட சம்மேளனம் மேற்கொண்டுள்ள தீர்மானத்தையிட்டு நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம்” என டயலொக் ஆசி ஆட்டா நிறுவனத்தின் வர்த்தக மற்றும் ஊடக பிரிவின் சிரேஷ்ட பொது முகாமையாளர் ஹர்ஷ சமரநாயக்க அவர்கள் தெரிவித்த்தார். மேலும் அவர் தெரிவிக்கையில், “நமது தாய்நாட்டிற்கு பெருமை சேர்க்கக்கூடிய நாளைய செம்பியன்களை உருவாக்குகின்ற டயலொக்கின் நெறிமுறைகளுக்கு ஒப்பானதாக மேற்படி பாடசாலைகளுக்கிடையிலான சுற்றுப் போட்டிகள் இதயத்திற்கு மிகவும் நெருக்கம் மிக்கதாக அமைந்துள்ளன. எனவே, இப்போட்டிகள் வெற்றிகரமானதாக அமைய மனப்பூர்வமாக வாழ்த்துகின்றேன்” என்றார்.

இலங்கைப் பாடசாலைகளின் ரக்பி கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் பி.ஏ. அபேரத்தன அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “சுமார் இரண்டு வருட கால இடைவெளியின் பின்னர் இலங்கையின் ரக்பி ரசிகர்களுக்கு பாடசாலைகளுக்கிடையிலான சிறப்புமிகு ரக்பி விளையாட்டை களத்தில் நேரில் கண்டுகளிப்பதற்கான வாய்ப்பு கிட்டியுள்ளது" என்றார். ”முன்னெப்போதும் இல்லாதவாறான இன்றைய சூழலில், பாடசாலைகளுக்கிடையிலான ரக்பி தொடருக்கு தமது முழு ஆதரவையும், அனுசரணை பங்களிப்பினையும் தொடர்ந்து வழங்குவதாக டயலொக் ஆசி ஆட்டா உறுதியளித்ததையிட்டு நான் உண்மையிலேயே நன்றியுள்ளவனாக இருக்கின்றேன். மேலும், இந்த 2022 பருவ கால போட்டிகள் அனைத்து அணிகளுக்கும் சிறப்புடையதாக அமைய வாழ்த்துகின்றேன்" எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பாடசாலைகளுக்கிடையிலான ரக்பி போட்டிகளின் பிரதான அனுசரணையாளர்கள் என்ற ரீதியில் டயலொக் ஆசி ஆட்டா மேற்படி போட்டிகளை மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள், ஆதரவாளர்கள், நலன் விரும்பிகள் மற்றும் ரக்பி அபிமானிகள் ஆகியோரின் வசதி கருதி thepapare.com ஊடாக நேரலையில் ஒளிபரப்புவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இலங்கை தேசிய கிரிக்கெட், வலைப்பந்து மற்றும் கரப்பந்து மற்றும் ஈஸ்போர்ட்ஸ் அணிகளுக்கான பெருமைமிகு அனுசரணையாளர்களாக செயற்பட்டு வருவதுடன், ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்டம், தேசிய ஜூனியர் மற்றும் சீனியர் வலைப்பந்து போட்டிகள், பிரிமியர் கால்பந்து போட்டிகள் மற்றும் பராலிம்பிக் உட்பட இராணுவ பரா விளையாட்டுக்கள், தேசிய பரா விளையாட்டுகள் மற்றும் உலக பாராலிம்பிக் விளையாட்டுகளில் கலந்து கொள்ளும் இலங்கை அணி ஆகிய அனைத்திற்கும் டயலொக் ஆசி ஆட்டா நிறுவனம் அனுசரணை வழங்கி வலுப்படுத்தி நெருங்கிய தொடர்பை பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.