பொருள் விரிவாக்கம்

டயலொக் ஆசிஆட்டா ‘தேசிய அணியின் உத்தியோகபூர்வ அனுசரணையாளராக’ இலங்கை கிரிக்கெட்டிற்கு வலுவூட்டுகிறது

2024 ஜனவரி 04         கொழும்பு

 

Dialog - Official National Team Sponsor

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் வர்த்தக நாமம் மற்றும் ஊடக துணைத்தலைவர் ஹர்ஷ சமரநாயக்க, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும சந்தைப்படுத்தல் அதிகாரி அமலி நாணயக்கார, டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்க, இலங்கை கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்லி டீ சில்வா, சுற்றுலாத்துறை மற்றும் காணிநில அமைச்சர் மற்றும் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார கௌரவ அமைச்சர் ஹரிண் பெர்னாண்டோ, விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார செயலாளர் கே. மஹேசன், இலங்கை கிரிக்கெட்டின் சந்தைப்படுத்தல் தலைவர் உபுல் நவரத்ன

உள்நாட்டு விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் திறமைகளை தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் வலுவூட்டி வரும் இலங்கையின் முன்னணி தொடர்பாடல் சேவை வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, தேசிய கிரிக்கெட் அணியின் உத்தியோகபூர்வ அனுசரணையாளராக இலங்கை கிரிக்கெட்டுடனான தனது நீண்டகால பங்குடைமையை மீண்டும் நீட்டித்து நாட்டின் விளையாட்டுத்துறை மீது தான் காட்டும் தனது அர்ப்பணிப்பை மறுபடியும் ஊர்ஜிதப்படுத்தியுள்ளது.

கடந்த ஒரு தசாப்தமாக நாட்டின் விளையாட்டு வீரர்களின் கனவுக்கு வலுவூட்டி வரும் டயலொக் ஆசிஆட்டா, நாட்டில் விளையாட்டுத்துறையை முன்னின்று ஊக்குவிப்போர் என்ற வகையில் மீண்டுமொரு முறை தேசிய கிரிக்கெட் அணிக்கு தோள்கொடுத்து வலுவூட்ட முன்வந்துள்ளது.

இந்த பங்குடைமை குறித்து விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ அவர்கள் கருத்து தெரிவிக்கையில், “எமது நாட்டின் விளையாட்டுத்துறையை மேம்படுத்த அசைக்கமுடியாத ஆதரவை நல்கி வரும் டயலொக் ஆசிஆட்டாவிற்கு எனது உளமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன். கடந்த ஆண்டுகளில் இலங்கையில் விளையாட்டை வளப்படுத்தி வளர்த்தெடுப்பதில் அவர்கள் ஆற்றிய பங்கு இன்றியமையாதது. இனி வரும் காலங்களில் இந்த பங்குடைமை மூலம் இலங்கையின் திறமை வாய்ந்த இளைஞர்களுக்கு தேசிய மற்றும் சர்வதேச அரங்குகளில் தம் திறமையை காட்ட எண்ணற்ற வாய்ப்புகளை வழங்கி அவர்களை மேம்படுத்த முடியும் என நான் திடமாக நம்புகிறேன்” என்றார்.

டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்க அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “தேசத்தின் கனாவாக திகழும் இலங்கை கிரிக்கெட்டின் ‘தேசிய அணியின் உத்தியோகபூர்வ அனுசரணையாளராக’ எமது தசாப்தம் தாண்டிய பங்குடைமையை தொடர்வதில் நாம் பெருமிதம் கொள்கிறோம். 17 மில்லியனுக்கும் மேற்பட்ட இலங்கையர்களின் நம்பிக்கைக்குரிய பங்காளரான டயலொக் இலங்கையின் மிக மதிப்புமிக்க வர்த்தக நாமமாக உயர்ந்துள்ளது. உலக அரங்கில் கிரிக்கெட்டின் மேன்மையை கொண்டாடி தீர்க்க எங்கள் வாடிக்கையாளர்களுடனும் சக இலங்கையர்களுடனும் ஒன்றாக கைகோர்த்து நிற்பதை எமக்கு கிடைத்த தனிச்சிறப்பாகவே கருதுகின்றோம்” என்றார்.

இலங்கை கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி அஷ்லி டீ சில்வா அவர்கள் கருத்து தெரிவிக்கையில், ”’தேசிய அணியின் அனுசரணையாளராக’ டயலொக் ஆசிஆட்டாவின் பங்கு இலங்கை கிரிக்கெட் நாமத்திற்கு நேர்மறையான சக்தியை அளிக்கிறது. இலங்கை கிரிக்கெட் மற்றும் டயலொக் ஆசிஆட்டாவிற்கு இடையிலான இந்த இணக்கமான பங்குடைமை வலுவான ஒருங்கிணைந்த பயணத்தை எடுத்துக்காட்டுகிறது. அர்ப்பணிப்பிலும் தொலைநோக்கு பார்வையிலும் ஒன்றித்த எம் பயணம் எம் பார்வையாளர்கள் மீதான நாம் கொண்டுள்ள மதிப்பை வளப்படுத்துவதாக அமையும்” என்றார்.

1996ல் ஐசிசி உலகக்கிண்ணம் மற்றும் 2014ல் ஐசிசி T20 உலகக்கிண்ணம் என இருமுறை உலகக்கிண்ணங்களை வென்ற இலங்கை கிரிக்கெட் அணி, 1986 இல் இருந்து அண்மையில் 2022ல் ஐக்கிய அரபு இராச்சியத்தில் வென்றதோடு இதுவரை 6 முறை ஆசியக்கிண்ணத்தை வென்றுள்ளது. 2022ல் ICC Champions Trophy இன் இணை வெற்றியாளரான இந்த அணி, இதுவரை காலத்தில் தென் ஆபிரிக்காவை டெஸ்ட் தொடரொன்றில் வீழ்த்திய ஒரே ஆசிய அணியாகவும் திகழ்கின்றது. 800 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய முத்தையா முரளிதரன், பிற அணிகளை கதிகலங்க வைக்கும் அதிரடி ஆட்டக்காரர் சனத் ஜயசூரிய, எளிதில் அடங்காது எதிரணிகளை பந்தாடும் அரவிந்த டி சில்வா இவர்களுடன் அணியை தாங்கிப்பிடித்த சிறந்த தலைமைகளான அர்ஜுன ரணதுங்க, மஹேல ஜயவர்தன ஆகியோருடன் 2012 மற்றும் 2015ம் ஆண்டுகளில் Wisden Cricketers’ Almanack இல் இடம்பிடித்தவரும் பெருமதிப்புமிக்க மரில்போன் கிரிக்கெட் கழகத்தின் முதல் பிரித்தானியர் அல்லா தலைவர் என்ற பெருமைக்குரியவருமான கிரிக்கெட்டின் கனவான் குமார் சங்கக்கார முதலிய பற்பல கிரிக்கெட் ஜாம்பவான்களை இலங்கை கிரிக்கெட் பெற்றெடுத்துள்ளது.

டயலொக் ஆசிஆட்டா இலங்கை தேசிய கிரிக்கெட், கரப்பந்து, வலைப்பந்து மற்றும் ஈஸ்போர்ட்ஸ் அணிகளுக்கான பெருமைமிகு அனுசரணையாளராக செயற்பட்டு வருவதுடன், ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்டம், தேசிய கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட வலைப்பந்து போட்டிகள், பாடசாலை ரக்பி, இலங்கை பகிரங்க கொல்ஃப், பராலிம்பிக் விளையாட்டுகள் உட்பட இராணுவ பரா விளையாட்டுகள், தேசிய பரா விளையாட்டுகள் மற்றும் உலக பரா விளையாட்டுகளில் கலந்து கொள்ளும் இலங்கை அணி ஆகிய அனைத்திற்கும் அனுசரணை வழங்கி நெருங்கிய தொடர்பை பேணி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.