பொருள் விரிவாக்கம்

இலங்கை விளையாட்டுத்துறையில் ஈட்டப்பட்ட வராலாற்று வெற்றியை டயலொக் ஆசிஆட்டா பாராட்டுகின்றது

தட, கள நிகழ்ச்சி ஒன்றில் இலங்கை முதலாவது உலக சாதனையை படைத்துள்ளது

August 31st, 2021        Colombo

 

news-1

டோக்கியோ 2020 பராலிம்பிக் விளையாட்டு விழாவில் F46 ஈட்டி எறிதல் போட்டியில் உலக சாதனையுடன் தங்கப் பதக்கத்தை சுவீகரித்த தினேஷ் பிரியந்த ஹேரத், F64 ஈட்டி எறிதலில் வெண்கலப் பதக்கம் வென்ற சமித்த துலான் கொடிதுவக்கு ஆகியோரின் அபரிமிதமான ஆற்றல் வெளிப்பாடுகளை, இரண்டு தசாப்தங்களுக்கு மேல் தேசிய பராலிம்பிக் குழுவுக்கு உத்தியோகபூர்வ அனுசரணை வழங்கிவரும் டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி நிறுவனம் பாராட்டி, வாழ்த்தியுள்ளது.

ஜப்பானில் நடைபெற்றுவரும் டோக்கியோ 2020 பராலிம்பிக் விளையாட்டு விழாவில், 2021 ஆகஸ்ட் 30ஆம் திகதியன்று காலை தினேஷ் பிரியன்த ஹேரத், இலங்கைக்கான முதலாவது தங்கப் பதக்கத்தை சுவீகரித்து வரலாறு படைத்தார். அவரது சகாவான சமித்த துலான் கொடிதுவக்கு அதே தினத்தன்று மாலையில் F64 ஈட்டி எறிதல் போட்டியில் 65.61 மீற்றர் என்ற தனது தனிப்பட்ட அதிசிறந்த தூரப் பெறுதியுடன் வெண்கலப் பதக்கதை வென்றார்.

ஆண்களுக்கான F46 ஈட்டி எறிதல் போட்டியில் 67.79 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து உலக சாதனை படைத்ததன் மூலம் 9 பேரைக் கொண்ட இலங்கை குழாத்தின் தலைவரான தினேஷ் பிரியந்த ஹேரத் விளையாட்டுத்துறை வரலாற்று ஏடுகளில் தனது பெயரைப் பதித்துக்கொண்டார்.

இந்த சாதனைமிகு வெற்றி குறித்து கருத்து வெளியிட்ட தினேஷ் பிரியன்த ஹேரத், 'புதிய உலக சாதனை ஒன்றை நிலைநாட்டி எனது தேசத்துக்கு தங்கப் பதக்கம் வென்றுகொடுப்பதே எனது பிரதான இலக்காக இருந்தது. பல வருட அர்ப்பணிப்புக்கு கிடைத்த பிரதிபலன்தான் இது. இந்த சாதனையை நிலைநாட்டியதையிட்டு நான் பெரு மகிழ்ச்சி அடைகின்றேன். தேசத்துக்காக சேவையாற்றியபோது 2008இல் எதிர்கொண்ட பாதிப்பிலிருந்து நான் மீண்டுவர 4 வருட புனர்வாழ்வு கைகொடுத்தது. அதன் பின்னர் 2012இல் நான் ஈட்டி எறிதலில் பங்குபற்ற ஆரம்பித்தேன். இந்த வெற்றியை நோக்கிய எனது பயணத்துக்கு உதவிய எனது குடும்பத்தினர், எனது அணியினர் மற்றும் எனக்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றிகூற விரும்புகின்றேன்' என்றார்.

இந்த வரலாற்று வெற்றி குறித்து பேசிய இளைஞர் விவகார விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ, 'நமது தேசத்துக்காக தங்கப் பதக்கத்தை தினேஷ் ஹேரத் வென்ற பின்னர் எமது தேசிய கீதம் அரங்கம் முழுவதும் எதிரொலித்தபோது அது மகிழ்ச்சியின் உச்சகட்டமாக அமைந்தது. அவரது சாதனை குறித்து விபரிக்க முடியாத அளவு பெருமிதம் அடைகின்றோம். உலக அரங்கில் இந்த மாற்றுத்திறனாளிகளை சாதிப்பதற்கு உதவிய தேசிய பராலிம்பிக் குழுவை நான் பாராட்டுகின்றேன். அவர்களது அர்ப்பணிப்புத்தன்மை, மனஉறுதி என்பன எதிர்பார்த்ததைவிட மேலாக அமைந்திருந்தன. விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களம், இளைஞர் விவகார, விளையாட்டுத்துறை அமைச்சு, தேசிய விளையாட்டுத்துறைப் பேரவையின் உயர் ஆற்றல் திட்டம் ஆகியவற்றின் முயற்சிகளுடன் கூட்டிணைந்து செயற்பட்ட தேசிய பராலிம்பிக் குழு, இலங்கையில் உள்ள ஏனைய விளையாட்டுத்துறை அமைப்புகளுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகின்றது. தேசிய பராலிம்பிக் குழுவுக்கு இரண்டு தசாப்தங்களுக்கு மேல் தொடர்ச்சியாக ஆதரவு வழங்கிவருகின்றமைக்காகவும் விளையாட்டுத்துறை எவ்வாறு உண்மையாக வாழ்க்கையை மாற்றுகின்றது என்பதை எமக்கு எடுத்துக்காட்டியதற்காகவும் டயலொக் ஆசிஆட்டாவுக்கு நான் நன்றி கூறுகின்றேன்' என குறிப்பிட்டார்.

இது தொடர்பாக கருத்து வெளியிட்ட தேசிய பராலிம்பிக் குழுத் தலைவர் கேணல் தீபால் ஹேரத், 'கடந்த சில வருடங்களாக இலங்கையை தொடர்ந்து பெருமைப்படுத்திவரும் தினேஷ் ஹேரத் மற்றும் டோக்கியோ 2020 பராலிம்பிக்கில் தனது தனிப்பட்ட அதிசிறந்த ஆற்றலை வெளிப்படுத்திய சமித்த கொடிதுவக்கு ஆகியோரையிட்டு நாங்கள் அளவற்ற பெருமை அடைகின்றோம். மிகவும் கடினமான இந்த இலக்கை அடைவதற்கு எமது குழுவினர் ஓரணியாக செயற்பட்டமைக்கு இந்த வெற்றிகள் சான்றாக அமைகின்றன. எமது வீரர்கள் மீது நம்பிக்கை கொண்டு, அவர்களது ஈடிணையற்ற ஆற்றல் வெளிப்பாடுகளை ஊக்குவிப்பதில் 2000இலிருந்து தொடர்ச்சியாக ஆதரவு வழங்கிவரும் டயலொக் நிறுவனத்துக்கு நாங்கள் நன்றி உடையவர்களாக இருக்கின்றோம்' எனக் குறிப்பிட்டார்.

இலங்கை பராலிம்பிக் குழுவின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் ஜே.ஆர். அம்ப்பேமொஹொட்டி கருத்து தெரிவிக்கையில், 'இலங்கை பராலிம்பியர்கள் வியக்கத்தக்க வகையில் செயற்பட்டுள்ளதுடன் டோக்கியோ 2020 பராலிம்பிக் விளையாட்டு விழாவில் தொடர்ச்சியான பதக்கங்களை வென்றதன் மூலம் அவர்களது தேசத்துக்கு பெருமை சேர்த்துள்ளனர். கொவிட்-19 தொற்று நோய் காரணமாக பயிற்சிகளைப் பெறுவதில் கட்டுப்பாடுகள் இருந்தன. எனினும் வெற்றிமேடையில் தோன்றுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை உணர்ந்து கடும் உழைப்புடன் கூடிய முயற்சியில் ஈடுபட்டனர். அவர்களது சாதனைகள் குறித்து நாங்கள் நம்பமுடியாத அளவுக்கு பெருமை அடைகின்றோம்' எனத் தெரிவித்தார்.

இந்த மைல்கல் சாதனை தொடர்பாக கருத்து வெளியிட்ட டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுபுன் வீரசிங்ஹ, 'மனஉறுதி, அர்ப்பணிப்பு, அபிலாஷை ஆகியவற்றைக்கொண்டு எதையும் சாதிக்க முடியும் என்பதற்கு தினேஷ் மற்றும் சமித்த ஆகியோரின் இந்த வரலாற்று வெற்றிகள் சான்றாக அமைவதை முழு இலங்கையருக்கும் உணர்த்துகின்றது. இந்த வரலாற்றுப் பயணத்தில் கடந்த இரண்டு தசாப்தங்களாக தேசிய பராலிம்பிக் குழுவுடனும் இராணுவ பரா விளையாட்டுத்துறையுடனும் பங்காளிகளாக இருப்பதையிட்டு டயலொக் ஆசிஆட்டா பெருமைகொள்கின்றது. தேசிய விளையாட்டுத்துறையுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கும் இலங்கையின் முன்னணி கூட்டாண்மை நிறுவனங்களில் ஒன்று என்ற வகையில், வருங்கால இலங்கை சம்பியன்களை ஊக்குவித்து, அவர்கள் விளையாட்டுத்துறையின் உச்சத்தை அடைந்து இலங்கைக்கு பெருமை சேர்த்துக்கொடுக்கும்வரை நாங்கள் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்' என்றார்.

இலங்கையில் கிரிக்கெட், றக்பி, கரப்பந்தாட்டம், வலைபந்தாட்டம் ஆகிய தேசிய அணிகளின் பெருமைக்குரிய அனுசரணையாளர் டயலொக் ஆசி ஆசிஆட்டா நிறுவனமாகும். ஜனாதிபதி தங்கக் கிண்ண கரப்பந்தாட்டம், தேசிய கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட வலைபந்தாட்டப் போட்டிகள், கழக மட்ட ரக்பி, பாடசாலைகளுக்கிடையிலான ரக்பி, ப்றீமியர் லீக் கால்பந்தாட்டம், பாடசாலைகள் கிரிக்கெட், கனிஷ்ட கரப்பந்தாட்டம், பரா விளையாட்டுக்கள் ஆகியவற்றுடன் டயலொக் ஆசிஆட்டா நிறுவனத்துக்கு நெருங்கிய தொடர்பு இருக்கின்றது. அத்துடன் இராணுவ பரா விளையாட்டுப் போட்டிகள், தேசிய பரா விளையாட்டுப் போட்டிகள், உலக பரா விளையாட்டுப் போட்டிகள் ஆகியவற்றுக்கும் டயலொக் ஆசிஆட்டா நிறுவனம் அனுசரணையாளராக திகழ்கின்றது.