பொருள் விரிவாக்கம்

டயலொக் ஆசிஆட்டா ‘தேசிய அணியின் உத்தியோகபூர்வ அனுசரணையாளராக’ இலங்கை கிரிக்கெட்டுக்கு தொடர்ந்து வலுவூட்டுகிறது

January 14, 2021         (வகொழும்பு)

 

தேசத்தின் பேரார்வத்திற்கு ஆதரவளித்து மிகப் பாரிய முதலீட்டாளராக இலங்கை கிரிக்கெட்டுடன் ஒரு தசாப்தகாலம் நீண்ட பங்குடமை

fisherman in Tissamaharama

உள்நாட்டு விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் திறமைகளை தேசிய மற்றும் சர்வதேச மட்டத்தில் வலுவூட்டுவதில் தீவிர அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்ற இலங்கையின் முன்னணி தொடர்பாடல் சேவை வழங்குனரான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி, இலங்கை கிரிக்கெட்டுடன் தனது நீண்ட கால பங்குடமையை 2023 வரை தொடரும். ‘இலங்கை கிரிக்கெட்டின் தேசிய அணிக்கான உத்தியோகபூர்வ அனுசரணையாளர்’ என்ற முறையில், இலங்கையில் விளையாடப்படும் அனைத்து வகையான டெஸ்ட், ஒரு நாள் மற்றும் இருபதுக்கு இருபது போட்டிகளில் ஆண்கள் மற்றும் பெண்களின் தேசிய கிரிக்கெட் அணிகளின் வளர்ச்சிக்கு டயலொக் இடமளிக்கும்.

பெருமதிப்புமிக்க SLIM-Nielsen Peoples Awards 2020 விருதுகள் நிகழ்வில், ‘வருடத்தின் மிகச் சிறந்த தொலைதொடர்பாடல் வர்த்தகநாமம்’ என்ற விருதை தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாகவும் வென்று சாதனை படைத்துள்ள டயலொக் ஆசிஆட்டா ‘வருடத்தின் மிகச் சிறந்த சேவை வர்த்தகநாமம்’ மற்றும் ‘வருடத்தின் மிகச் சிறந்த இளைஞர் தெரிவு சேவை வர்த்தகநாமம்’ ஆகிய விருதுகளையும் வென்றுள்ளது. அத்துடன், Brand Finance சுற்று அட்டவணைப் பட்டியலில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ‘மிகவும் பெறுமதிமிக்க நுகர்வோர் வர்த்தகநாமம் 2019’ மற்றும் தொடர்ந்து பதின்மூன்றாவது ஆண்டாக ‘மிகச் சிறந்த தொலைதொடர்பாடல்கள் வர்த்தகநாமம்’ ஆகிய விருதுகளை வென்று தனது வலுவான ஸ்தானத்தை மேலும் உறுதிப்படுத்திக் கொண்டுள்ளது. இதற்கு மிகவும் பொருத்தமாக, இலங்கை மக்களின் தேசிய ஆர்வத்தை ஈர்த்துள்ள கிரிக்கெட்டை வலுவூட்டும் பொறுப்பை 2013 ஜுன் 1 ஆம் திகதியன்று டயலொக் ஆசிஆட்டா ஏற்றுக்கொண்டது. தற்போது அனுசரணையை புதுப்பித்து மேலும் நீட்டித்துள்ளமை மூலம் இந்த தொடர்ச்சியான உள்நாட்டுப் பங்குடமையானது 2023 வரை தொடரவுள்ளது. இலங்கையில் அனைத்து மக்களினதும் இதயங்களை வென்றுள்ள இலங்கை கிரிக்கெட் மற்றும் விளையாட்டு அணியுடன் கொண்டுள்ள கூட்டணியை ஒரு தசாப்தகாலம் கொண்டதாக மாற்றும் பயணத்தில் தொடர்ந்து முன்னோக்கிச் செல்ல இது வழிகோலியுள்ளது.

இந்த மகத்தான தருணம் தொடர்பில் இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சரான கௌரவ நாமல் ராஜபக்ச அவர்கள் கருத்து வெளியிடுகையில், “இலங்கையில் விளையாட்டுகளின் வலுவான, ஊக்கமளிக்கும் மற்றும் நீண்ட கால பங்காளராகத் திகழ்ந்து வருவதுடன், அயராத முயற்சி காரணமாக கடந்தகாலங்களில் இலங்கையில் விளையாட்டின் வளர்ச்சிக்கு உதவியமைக்காக டயலொக் ஆசிஆட்டாவுக்கு இத்தருணத்தில் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இந்த கூட்டாண்மையானது எதிர்காலத்தில் இலங்கையில் திறமையான இளைஞர், யுவதிகளுக்கு தேசிய மற்றும் சர்வதேச அரங்கில் பிரகாசிக்க இன்னும் அதிக வாய்ப்புகளை வழங்கும் என்று நாம் உண்மையில் நம்புகிறோம்,” என்று குறிப்பிட்டார்.

“இலங்கை கிரிக்கெட்டின் தேசிய அணிக்கான உத்தியோகபூர்வ அனுசரணையாளர்" என்ற வகையில், இலங்கை கிரிக்கெட்டுடன் ஒரு தசாப்த காலம் நீண்ட இந்த அர்ப்பணிப்புடனான உறுதிப்பாட்டை மேலும் நீட்டிப்பது எமக்கு மிகுந்த பெருமையளிக்கின்றது. 15 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள், வீடுகள் மற்றும் நிறுவனங்களை எமது மொபைல், புரோட்பான்ட், நிலையான இணைப்பு மற்றும் டிஜிட்டல் தொலைக்காட்சி சேவைகள் மூலமாக இணைத்து, இலங்கையின் முதன்மையான தொலைதொடர்பாடல் சேவை வழங்குனர் என்ற சாதனையை நிலைநாட்ட எமக்கு இடளித்து, எங்கள் வாடிக்கையாளர்கள் எங்களைக் கௌரவித்துள்ளனர். கிரிக்கெட் மீது பேரார்வம் கொண்டுள்ள எமது வாடிக்கையாளர்கள் மற்றும் சக இலங்கை மக்களுடன் இணைந்து, சர்வதேச அரங்கில் தொடர்ந்து சிறந்து விளங்குவதற்கான தேடலிலும் இணைவது எமக்குக் கிடைக்கின்ற ஒரு தனித்துவமான பாக்கியமாகும்,” என்று டயலொக் ஆசிஆட்டா பிஎல்சியின் குழும தலைமை நிர்வாக அதிகாரியான சுப்புன் வீரசிங்க அவர்கள் குறிப்பிட்டார்.

“இரு ஸ்தாபனங்களும் எதிர்காலத்தை நோக்கிய தெளிவான இலக்கினைக் கொண்டிருப்பதாலும். மற்றும் எமது வாடிக்கையாளர்களுக்கு அல்லது பார்வையாளர்களுக்கு பெறுமதியை அதிகரிப்பதாலும், ‘இலங்கை கிரிக்கெட்டின் தேசிய அணிக்கான உத்தியோகபூர்வ அனுசரணையாளராக’ டயலொக் ஆசிஆட்டாவைக் கொண்டிருப்பது கிரிக்கெட் விளையாட்டிற்கும், இலங்கை கிரிக்கெட் வர்த்தக நாமத்திற்கும் சிறந்தது,” என்று இலங்கை கிரிக்கெட் சபையின் தலைமை அதிகாரியான ஷம்மி டி சில்வா அவர்கள் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், “களத்திற்கு உள்ளேயும், வெளியேயும் சிறந்து விளங்குவதில் எங்கள் நன்மதிப்பை நிலைநாட்டுவதன் மூலம் எங்கள் அனுசரணையாளர்களுக்கு இன்னும் அதிக மதிப்பை வழங்கும் வகையில் ஒன்றிணைந்து செயற்பட இலங்கை கிரிக்கெட் ஆவலுடன் உள்ளது,” என்று குறிப்பிட்டார்.

கடந்த ஆறு ஆண்டுகளில் இரண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டிகளில் பங்கேற்றதோடு, 1996 இல் ICC உலகக் கிண்ணத்தை வென்ற பெருமையும் இலங்கை கிரிக்கெட் அணியைச் சாரும். இலங்கை கிரிக்கெட் அணி 2002 இல் ICC சாம்பியன்ஸ் கிண்ணத்தையும், 2014 இல் ICC இருபதுக்கு இருபது உலகக் கிண்ணத்தையும் வென்றுள்ளதுடன், மற்றும் 1986, 1997, 2004, 2008 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் ஆசியக் கிண்ணத்தின் வெற்றியாளர்களாகவும் வலம்வந்தது. 800 டெஸ்ட் விக்கெட்டுகளைக் கைப்பற்றி, எவருமே இலகுவில் தொட்டுவிட முடியாத உலக சாதனையுடன் விடைபெற்ற சுழல் பந்து வீச்சு மன்னன் முத்தையா முரளிதரன், உலகத்தில் இதுவரையில் மிகவும் அபாயகரமான துடுப்பாட்ட வீரர்களில் ஒருவர் என புகழீட்டிய சனத் ஜெயசூரிய, உலகக் கிண்ணத்தை வென்ற அணித்தலைவர் அர்ஜுன ரணதுங்க, துடுப்பாட்ட மேதையான அரவிந்த டி சில்வா, துடுப்பாட்டத் தொழில்நுட்பத்தில் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான மஹேல ஜெயவர்த்தன, 2012 மற்றும் 2015 ஆம் ஆண்டிற்கான விஸ்டன் கிரிக்கெட் வீரர் என்ற புகழை ஈட்டிய மிகவும் நேர்த்தியான துடுப்பாட்ட வீரரான குமார் சங்கக்கார அடங்கலாக உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்கள் பலரை இலங்கை கிரிக்கெட் தோற்றுவித்துள்ளது. கிரிக்கெட் விதிகளை எழுதும் அணி எனவும், கிரிக்கெட் உலகின் ‘மெக்கா’ என்று அழைக்கப்படுகின்ற லண்டனிலுள்ள உலகப் புகழ்பெற்ற லோர்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தின் உரிமையாளர்களுமான மேரிலேபோன் கிரிக்கெட் கழகத்தின் (Marylebone Cricket Club - MCC) முதல் பிரித்தானியர் அல்லாத தலைவர் என்ற பெருமையும் குமார் சங்கக்கார அவர்களையே சாரும்.

இலங்கை தேசிய கிரிக்கெட், ரக்பி, கரப்பந்தாட்டம் மற்றும் வலைப்பந்தாட்ட அணிகளுக்கு அனுசரணை வழங்குவதில் டயலொக் பெருமை கொள்கின்றது. ஜனாதிபதியின் தங்கக் கிண்ண கரப்பந்தாட்டம், தேசிய கனிஷ்ட மற்றும் சிரேஷ்ட வலைப்பந்தாட்டப் போட்டிகள், கழக மட்ட ரக்பி, பிரீமியர் உதைப்பந்தாட்டப் போட்டிகள், பாடசாலைகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகள், கனிஷ்ட மட்ட கரப்பந்தாட்டம் மற்றும் பரா ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆகியவற்றுடனும் இந்த நிறுவனம் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது. அதே சமயத்தில் இராணுவ பரா விளையாட்டுக்கள், தேசிய பரா விளையாட்டுக்கள், ஒலிம்பிக் மற்றும் உலக பரா ஒலிம்பிக் போட்டிகளில் இலங்கை அணி ஆகியவற்றையும் வலுவூட்டி வருகிறது.